சா/த சிறந்த பெறுபேறு: 25 கல்வி வலயங்களுக்குள் வடக்கு வலயம் இல்லை

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வலஸ்முல்ல கல்வி வலயம் 84.70 சதவீதத்தை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தை 82.79 சதவீதம் பெற்று கண்டி கல்விவலயமும், 79.74 சதவீதத்தை பெற்று மூன்றாமிடத்தை மாத்தறை மாவட்டத்தில் உள்ள முலட்டியன கல்வி வலயமும் தனதாக்கிக் கொண்டுள்ளது. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில், 98 கல்வி வலயங்களின் கீழுள்ள பாடசாலைகள் பெற்ற, பெறுபேறுகளை அடிப்படையாக வைத்தே, வலயங்களின் நிலைகள் பிரிக்கப்பட்டுள்ளன என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், தெரிவு செய்யப்பட்ட முதல் 25 வலயங்களுக்குள் வடக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு கல்வி வலயமும் இடம்பிடித்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்றாலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்று கல்வி வலயம் 71.90 சதவீதத்தை பெற்று 24ஆம் இடத்தையும், கல்முனை கல்வி வலயம் 71.86 சதவீதத்தை பெற்று 25ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

2015ஆம் ஆண்டுக்கான பெறுபேற்றின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலில், கண்டி கல்விவலயம் 83.06 சதவீதத்தை பெற்று முதலாம் இடத்தையும், வலஸ்முல்ல கல்விவலயம் 83.03 சதவீதத்தை பெற்று இரண்டாமிடத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயம் 78.68 சதவீதத்தை பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தன.

Related Posts