சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது.

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும் கல்வி கற்க கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.

சாதாரண தரப் பரீட்சையில் தேவையான பாடங்களில் சித்தியெய்தாத மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் இடை விலகுவதனை தவிர்க்க முடியும்.

இசை, விளையாட்டுத்துறை போன்றவற்றில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அந்தந்த துறைகளில் உயர்கல்வி தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப யுகமொன்று உருவாக உள்ளதனால் தகவல் தொழில்நுட்பத்துறைக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க்பபட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Posts