கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சை ஆகிய இரண்டையும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை திகதிகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக பரீட்சை திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டு பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பட்டார்.
மாணவர்கள் வீணாக காலம் கடத்துவதை தவிர்த்து 25 வயது பூர்த்தியடையும்போது பட்டப்படிப்பு மற்றும் ஏனைய துறைசார்ந்த பட்டப்படிப்பை நிறைவுசெய்துக் கொள்ளும் வகையில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான நிலையான திகதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் 5ஆம் திகதியும், சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் மார்ச் 28ஆம் திகதியும், உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ஆம் திகதியும் வெளியிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.