க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தரம் 11 மாணவர்களுக்கான பிரதான பாடங்களின் நூல்கள் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடுமுழுவதும் அனைத்து தரங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநுால்களுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்த ஆண்டுக்கு 4 கோடியே 11 இலட்சத்து 89 ஆயிரத்து 27 பாடநூல்கள் தேவை எனக் கணக்கிடப்பட்டது. எனினும் 2 கோடியே 82 இலட்சத்து 10 ஆயிரத்து 600 பாடநூல்களே அச்சிடப்பட்டுள்ளன” என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளில் பாடநூல்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளன. குறிப்பாக வரும் டிசெம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான பாடநூல்கள் கிடைக்கவில்லை என மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரல் நிறைவடைந்துள்ள நிலையிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் கிடைக்கவில்லை.
இந்த விடயத்தில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.