எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன.
அதன் விவரம்:–
முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை எடுக்கப்பட்டுள்ளது.
சிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கெய்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தார். இதில் குறைந்த பந்தில் இரட்டை சதம் எடுத்து சாதனை புரிந்தார்.
அதைத்தொடர்ந்து நியூசிலாந்து வீரர் குப்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 237 ஓட்டங்களைக் குவித்தார்.
இதுவே உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனையாக உள்ளது. 1996–ம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிராக தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரிஸ்டன் 188 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதன்படி 19 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது.
இலங்கை வீரர் சங்கக்கார தொடர்ந்து 4 சதம் அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவர் பங்களாதேஷூக்கு எதிராக 105 ஓட்டங்களையும், இங்கிலாந்துக்கு எதிராக 117 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ஓட்டங்களையும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ஓட்டங்களையும் தொடர்ந்தும் எடுத்து முத்திரை பதித்தார்.
வேறு எந்த ஒரு வீரரும் தொடர்ந்து 4 சதம் அடித்தது கிடையாது.
மேலும் சங்கக்கார விக்கெட் கீப்பிலும் புதிய சாதனை படைத்தார். கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் 54 பேர் அவுட் ஆக காரணமாக இருந்தார். இதன் மூலம் கில்கிறிஸ்ட் சாதனையை (52) அவர் முறியடித்தார்.
எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு 38 சதங்கள் அடிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் யாரும் சதம் அடிக்கவில்லை.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா தலைவர் டிவில்லியர்ஸ் 64 பந்துகளில் 150 ஓட்டங்களை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.
ஏற்கனவே குறைந்த பந்தில் அரைசதம், சதம் அடித்த சாதனை வீரராக அவர் திகழ்ந்தார்.
கிறிஸ்கெய்ல் – சாமுவேல்ஸ் ஜோடி சிம்பாப்வேக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 373 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.
ஒரு நாள் போட்டி வரலாற்றில் எந்த ஒரு ஜோடியும் எவ்வளவு அதிகமான ஓட்டங்களை எடுத்தது இல்லை.
இதேபோல தென்னாபிரிக்காவின் மில்லர்– டுமினி ஜோடி 5–வது விக்கெட்டுக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சைமான் அன்வர்- ஜாவித் ஜோடி 7–வது விக்கெட்டுக்கு உலகக் கிண்ணத்தில் சாதனை படைத்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 417 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது. இதன்படி இந்தியாவின் உலகக் கிண்ண சாதனை (413) முறியடிக்கப்பட்டது.
இந்த உலகக் கிண்ணத்தில் மூன்றுமுறை 400 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. தென்னாபிரிக்கா அணி அயர்லாந்துக்கு எதிராக 411 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 408 ஓட்டங்களையும் குவித்தது.
350 ஓட்டங்களில் இருந்து 400 ஓட்டங்களுக்கு மேல் 7 முறை எடுக்கப்பட்டது சாதனையாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியா 275 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இதன் முலம் இந்தியாவின் உலகக் கிண்ண சாதனை (257 ஓட்டங்களில் பெர்மூடாவை வீழ்த்தி இருந்தது) முறியடிக்கப்பட்டது.
இதேபோல இந்த உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவும் 257 ஓட்டங்களில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இருந்தது.
அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 688 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது. இது சாதனையாகும்.
கடந்த உலகக் கிண்ணத்தில் இந்தியா – இலங்கை மோதிய ஆட்டத்தில் மொத்தம் 676 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் இந்த உலகக் கிண்ணத்தில் தான் அதிகமாக இருந்தது.
28 முறை 4 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஸ்டீவ்பின், தென்னாபிரிக்க சுழற்பந்து வீரர் டுமினி ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்தனர்.
இந்த உலகக் கிண்ணத்தில் இந்திய அணி தொடர்ந்து 7 முறை எதிர் அணியை ‘ஆல்அவுட்’ செய்து சாதனை படைத்தது.
70 விக்கெட்டுகளில் உமேஷ் யாதவ் அதிகமாக 18 விக்கெட் கைப்பற்றினார். அவருக்கு அடுத்தப்படியாக முகமது ஷமிக்கு 17 விக்கெட்டுக்கள் கிடைத்தன.
இரசிகர்களின் ஆதரவு இந்த உலகக் கிண்ணத்தில் அமோகமாக இருந்தது. மைதானத்தில் சென்று பார்த்த இரசிகர்களின் எண்ணிக்கையும், தொலைக்காட்சியில் நேரில் பார்த்தவர்களில் எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த உலகக் கிண்ணத்தில் பெரும்பாலான ஆட்டங்களில் மிகுந்த பரபரப்பு, விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது. ஒரு சைடு ஆட்டமாகவே அமைந்தது.
நேற்றைய இறுதிப் போட்டி, இந்தியா – அவுஸ்திரேலியா அரை இறுதி, 4 கால் இறுதி மற்றும் பெரும்பாலான ஆட்டங்களில் சுவாரசியம் இல்லாமல் ஒரு பகுதி ஆட்டமாகவே இருந்தது.
தென்னாபிரிக்கா – நியூசிலாந்து மோதிய அரை இறுதி, அவுஸ்திரேலியா – நியூசிலாந்து மோதிய லீக் ஆட்டம், ஆப்கானிஸ்தான்– ஸ்காட்லாந்து, சிம்பாப்வே – ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருந்தது.