மீனவர்களின் வாழ்வுரிமையை கருத்திற்கொண்டு 2 கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவனினால் முன்னெடுக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு குருநகர் சவற்சாலை சந்தியில் உண்ணாவிரத இடத்திற்குச் சென்ற யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், 2 கோரிக்கைகளுக்குமான தீர்வினை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக உறுதியளித்த பின்னர் சகாதேவன், இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தினை நிறைவுக்கு கொண்டு வந்தார்.
அத்துடன், மீனவர்களின் வாழ்வுரிமைக்காகவும், இந்திய இழுவைப் படகினால் கடல்வளம் அழிக்கப்படுவதையும், உள்ளூர் இழுவைப்படகு மற்றும் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் மூலம் தொழில் செய்வதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர், வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சமமேளனத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சு, கடற்றொழில் அமைச்சுக்களுக்கு கையளிக்கப்பட்டது.
அதேவேளை, உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவரின் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதனால், அவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
மீனவர்களின் வாழ்வுரிமைக்காக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு