சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் மூவரையும் அதிலிருந்து விடுதலை செய்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும், இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதியின் விசேட தூதுவராக அங்கு செல்வதற்கு அமைச்சர் ஹக்கீம் தயார் நிலையிலேயே இருக்கின்றார் என்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.
இதன்போது, தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
இவற்றுக்குரிய பதில்களை அமைச்சர் தலதா அத்துகோரல சபையில் ஆற்றுப்படுத்தினார். இதனையடுத்து இடையிட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. சாந்த பண்டார, “இரண்டு சிங்களப் பெண்கள், ஒரு முஸ்லிம் பெண் என மூன்று இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இவர்களை விடுதலை செய்துகொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை? இந்த விடயத்தைக் கையாள்வதற்கு விசேட தூதுவர் ஒருவர் அங்கு செல்வாரா? ஆம் எனில், எப்போது?” என்று வினாக்களைத் தொடுத்தார்.
இவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர் அத்துகோரல கூறியவை வருமாறு:
2007ஆம் ஆண்டில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேரில் 8 பேர் பல்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய மூவரும் மூன்று தடவைகள் மேன்முறையீடு செய்தனர். எனினும், மரணதண்டனை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
எமது நடவடிக்கைகளின் பிரகாரம், சிரச்சேதம் செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களை விடுவிப்பதற்கு பணம் வழங்கவேண்டும். அதை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு இணங்கியுள்ளது. தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட விடயங்கள் பற்றியே தற்போது பேசவேண்டும். அத்துடன், சிரச்சேதம் நிறுத்தப்பட்டுள்ளதால் சிறைத்தண்டனையை அவர்கள் அங்கு அனுபவிக்கவேண்டுமா அல்லது இங்கு அனுபவிக்கவேண்டுமா என்பது பற்றியும் கவனிக்கவேண்டியுள்ளது. அத்துடன், இது சம்பந்தமாக ஜனாதிபதியின் விசேட தூதுவராக சவூதி செல்வதற்கு ஹக்கீம் தயாராகவே இருக்கிறார். தற்போது எமது முயற்சி சாதக கட்டத்தை எட்டியுள்ளதால் விசேட பிரதிநிதிகூட தேவையில்லை – என்றார்.