சவூதியின் மக்கா நகரில் நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல் முறியடிப்பு

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள மசூதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக சவூதி உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கா மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்ததாகவும், குறித்த தகவலறிந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் தனது உயிரையே மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தால் அந்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததாகவும், சுமார் 11 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தோரில் பொலிஸாரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என சவூதி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் உம்ரா தொழுகைக்கு சென்றிருந்த பக்தர்களைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்படவிருந்தது எனவும், எனினும் அது முறியடிக்கப்பட்டது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts