நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அகற்றப்பட்ட, அகற்றப்படாத பகுதிகளில் நடமாடும் வர்த்தகர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிமுறைகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நடமாடும் வர்த்தகர்கள் ஊடாக கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த விசேட வழிகாட்டல் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு சென்று மீன், மரக்கறி, பழங்கள் மற்றும் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வோருக்கே விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுத்தமான ஆடைகளை அணிந்திருத்தல், பாதணிகளை அணிந்திருந்தல், விற்பனை நடவடிக்கையின் போது முகக்கவசங்களை அணிந்திருத்தல், கைகளுக்கு தொற்று நீக்கிகளை பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளை நடமாடும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பேக்கரி உற்பத்திகளின் போதும், ஏனைய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் போதும் உரிய உபகரணங்களை பயன்படுத்துதல் மற்றும் உணவுப்பொருட்களை கடதாசியில் சுற்றி விற்பனை செய்தல் ஆகிய வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கைகளுக்கு தொற்று நீக்கி பயன்படுத்தி சுத்தப்படுத்தியதன் பின்னர் ஏனைய பொருட்களை தொடுமாறும் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்யும் போது, பொருட் கொள்வனவு செய்பவர்கள் ஒரு மீற்றர் தூரத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி தலைமையில் கூடிய விஷேட வைத்திய நிபுணர்களுடனான சந்திப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மக்களின் நடமாட்டம் உள்ளிட்ட விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் விஷேடமாக சமூக இடைவெளியை பேணும் நோக்குடன் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது பின் ஆசனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும் என விஷேட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவாகியுள்ள தகவல்கள் பிரகாரம், பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் தொற்றாளரான சிகை அலங்கர நிலைய ஊழியர், அப்பகுதியில் சிகையலங்காரம் செய்த 25 பேர் வரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள விடயம் பேசப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் கொரோனா தொற்று பரவுவதற்கு ஏதுவான காரணிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவைய ரீதியில் அனைத்து சிகை அலங்கார நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில், பஸ் போக்குவரத்தில் பொது மக்கள் ஈடுபடும் போது சமூக இடை வெளி தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதால், பஸ் போக்குவரத்தையும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே புகையிரத போக்குவரத்து அவ்வாறுமட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஸ்களில் பயணம் செய்ய வேண்டுமாயின் அத்தியாவசிய சேவை குறித்த நிறுவனத்தின் கடிதத்தை கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது.