சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பொன்சேகாவின் நாடாளுமன்ற உரை!

முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக முக்கியமான தகவல்களை அக்குவேறு ஆணி வேறாக தோலுரித்துக்காட்டி அம்பலப்படுத்தி இருக்கிறார் அமைச்சர் பொன்சேகா.

2009 மே மாதம் 19ம் திகதி யுத்தம் முடிந்து விட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனேயே இருந்ததாகவும், மஹிந்த ராஜபக்ச அன்று பாராளுமன்றத்திலும், நாட்டு மக்கள் மத்தியிலும் பொய்யையே கூறியதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமன்றி, தேச மக்களை ஏமாற்றும் விதத்தில் போர் முடிவதற்கு முன்னரே நாட்டைக் காப்பாற்றிய வீரனைப் போன்று மண்ணை முத்தமிட்டதாகவும், ஒரு கட்டத்தில் கடற்புலிகளுக்கு படகு வாங்குவதற்காக 200 மில்லியன் ரூபாவை பஷில் ராஜபக்ச இரகசியமாக வழங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்களை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போட்டுடைத்துள்ளார்.

வெள்ளைக் கொடி விவகாரம் கூட மக்களின் கண்களில் மண் தூவப்பட்டிருப்பதாகவும் அது குறித்து வெளிப்படையான விசாரணையொன்று மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறார்.

இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது என்பது குறித்து உண்மைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவிருப்பதாகவும் தன்னால் முன்வைக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் இறுதிக் கட்டப் போர் உட்பட அதற்குப் பின்னரான சம்பவங்களை மையமாக வைத்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பிலும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். 400 கிலோவுக்கும் கூடுதலான தங்கம் இறுதிக் கட்டப் போரின் போது மீட்கப்பட்டதாகவும் இதில் பெரும் தொகையானவை ராஜபக்ச குழுவினரால் கொள்ளையிடப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இறுதிக் கடட யுத்தம் முடிவுற்று 6 வருடங்கள் கடந்த பின்னர் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை சரத் பொன்சேகா வெளிப்படுத்தியிருக்கின்றார். பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்ததாகவும் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

யுத்தத்தின் பின்னர் தன்னை பழிவாங்கும் கைங்கரியத்தையே ராஜபக்ச பரிவாரம் முன்னெடுத்து வந்ததாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தன் உயிரைப் பறிக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பாராளுமன்றம் என்பது உன்னதமான இடம், மக்கள் பிரதிநிதிகள் சபையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொய் பேசுவதில்லை, நாட்டுக்குத் துரோகமாகச் செயற்படுவதில்லை, இறைமையை பாதுகாப்பதாகக்கூட சத்தியப் பிரமாணம் செய்தே பதவி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த வாக்குறுதியை ஒவ்வொரு உறுப்பினரும் காப்பாற்றியாக வேண்டும்.

அவ்வாறான மேன்மைமிக்க சபையில் அமைச்சர் சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தம் பற்றி வாய் திறந்திருக்கிறார். அவரது உரையை செவிமடுத்த சபையினர் வாய்மூடி அனைத்தையும் மெளனமாக செவிமடுத்திருக்கின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சபையிலிருந்து யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.

2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றியை தன்வசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மஹிந்த ராஜபக்ச பல நாடகங்களை அரங்கேற்றி வந்தார். ஒரு கட்டத்தில் இராணுவ தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை வெளியேற்றும் முயற்சிகூட இடம்பெற்றது. இதனைப் புரிந்துகொண்ட சரத் பொன்சேகா தாமாகவே பதவியை துறந்துவிட்டு அரசியலில் இறங்கினார்.

அன்று களனி விகாரையில் கருத்துத் தெரிவித்த அவர் உண்மைகள் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. அவை என்றாவது ஒருநாள் வெளிவரத்தான் போகிறது. அந்த நேரத்தில் நிச்சயம் நானும் வாய் திறப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பம் 6 ஆண்டுகள் கழிந்த பின்னரே கிட்டியுள்ளதாக எண்ண முடிகிறது. தேர்தல் மேடைகளிலோ, கட்சிக் கூடங்களிலோ பேசாத பல விடயங்களை அதிகாரபூர்வமாக பாராளுமனறத்தில் அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமை, 91ல் படையிலிருந்து விலகியவர் யுத்த வெற்றிக்கு உரிமை கொண்டாடியமை போன்ற பல விடயங்கள் போட்டுடைக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியே கவனத்தில் எடுத்து ஆராயப்பட வேண்டியவையாகும். தேச நலனில் அக்கறை கொண்டவர்கள் எவரும் இதனை புறந்தள்ளி செயற்பட முடியாது.

பொன்சேகாவின் உரையை பொய் குற்றச்சாட்டாகவோ, பழிசுமத்தலாகவோ நோக்க முடியாது. விரிவான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இக்குற்றச்சாடடுக்கள் சாதாரணமானவையாகக் கொள்ள முடியாது. மிகப் பாரதூரமானவையாகும். ஒவ்வொன்றும் தேசத்துரோகத்துடன் தொடர்புபட்டவையாகும்.

எனவே அரசாங்கம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் இந்த உரையை பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் பார்க்காமல் சட்டப்படியான வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே தேசமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சரத் பொன்சேகாவின் உரையின் பெறுமானத்தை நாம் சொல்லி அரசு புரிய வேண்டியதில்லை. அதன் காத்திரத்தன்மையை அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது என்றே நம்பலாம். அதற்கு வினைத்திறன் கொண்ட பதிலீட்டை விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று நம்புவோமாக.

Related Posts