சர்வதேச விசாரணை முடிவடைந்தமை நீதியரசருக்கு புரியாதிருந்தால் அது ஆச்சரியம் ! – மாவை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை கேலி செய்யும் வகையிலும் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் கூறியிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் தான் தெரிவித்த ஒரு கருத்து பொய் என்று சொல்லி கஜேந்திர குமார் பொன்னம்பலம் தனது அம்மாவை கொண்டு சத்தியம் செய்ததும் பொய் என்றும் தான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சீவிய காலத்திற்கு பதில் கூற முடியாது என்றும் மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.

அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வருமாறு. அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.



சென்ற ஆண்டு மனித உரிமை பேரவை கூட்டம் ஒன்றில் பெண்களை பற்றி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். போர் நடந்த காலத்திலும் போருக்கு பின்னரான காலத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையால் எமது பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் பாதுகாப்பு விடங்கள் பற்றி சாட்சியங்களுடன் ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது போல் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற பிரேரணையை ஒரு வல்லாண்மை மிக்க நாட்டின் உதவியோடு அந்த சபையில் கொண்டு வர முடியும்.

நவநீதம்பிள்ளை இந்த பிரேரணையை நிறைவேற்றும் பொருட்டு இலங்கைக்கு வந்ததை நீங்கள் அறிவீர்கள். ராஜபக்ச காலடி எடுத்து வைக்க விடமாட்டேன் என்றார். ஆனால் அவர் வந்தார். அரை மணி நேரமே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒன்றரை மணி நேரம் பூட்டிய அறையில் பல விடயங்களை நாம் பேசியிருந்தோம். அவருடைய ஆவல் பெண்கள் எவ்வளவு தூரம் அவலப்பட்டுள்ளார்கள் என்ற விடயத்தை பதிவு செய்ய விரும்பவதாகவும் அப்படிப்பட்ட பெண்களை அழைத்து வருமாறும் கோரியிருந்தார். ஆனால் எமது பெண்கள் பயப்பட்டார்கள்.

இராணுவ வீரர் கத்துருசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமந்திரன் சட்டத்தரணியாக உள்ளமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து அவர்கள் வர பயந்த காரணத்தால் சத்தியக்கடதாசியாக முடித்து கொடுத்திருந்தார். அதனை இன்று போர்க்குற்ற விசாரணை இடம்பெறவுள்ளதை போன்று அதனையும் நாம் அமெரிக்க போன்ற வல்லாமை நாடுகளின் மூலமாக ஐ.நாவில் பிரேரணையாக கொண்டு வரமுடியும்.

இதேவேளை இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழர்களினுடைய நிலங்கள் தொடர்பாகவும் பிரேரணையை நாம் சமர்ப்பிக்கலாம். இதேவேளை அழிக்கப்படுகின்ற இனம் என்ற ரீதியிலும் நாம் ஒரு பிரேரணையை ஐ.நாவில் கொண்டுவரலாம். இதற்கான வேலைகள் மிக அதிகமாகும். ஆளுமையும் ஆற்றலும் கொண்டவர்கள் இதில் பணியாற்ற வேண்டியுள்ளது.

இதனை விடுத்து வெறுமனே பத்திரிகை அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இன்று போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஆரம்பத்தை தெரிந்துகொள்ளாத பலர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த போர்க்குற்ற விசாரணை சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும் என்று 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரைக்கும் அமெரிக்க இராஜாங்க அமைச்சால் அழைத்ததன் அடிப்படையில் அங்குள்ள 24 அங்கங்களுடன் பேசி இறுதியாக 27 ஆம் திகதி நண்பகலுக்கு பிறகு உதவி இராஜாங்க செயலாளரின் தலைமையில் கூடிய கூட்டத்தில் சம்பந்தர் உரையாற்றியிருந்தார். அதன் பின்னர் இப்படிப்பட்ட தலைவரை நீங்கள் பெற்றது பாக்கியம் என்று கூறினார் உதவி இராஜாங்க அமைச்சர்.

நாங்கள் சர்வதேச விசாரணையே தேவை என்று தீர்மானத்திற்கு வந்துவிட்டோம் எனவும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்ப்பட்டு இன்று தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது.

சர்வதேச விசாரணை தான் அங்கு நடைபெற்றுள்ளது. அந்த தீர்மானத்தில் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றது. ஏன் இந்த போர் ஏற்பட்டது. அந்த போரில் ஏன் குற்றங்கள் இழைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் எவ்வளவு தூரம் மீறப்பட்டுள்ளன. போர் விதிமுறைகளை ராஜபக்ச அரசாங்கம் எவ்வளவு தூரம் மீறியுள்ளது என்று சாட்சியங்களில் அடிப்படையில் ஆராயப்பட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது சிலர் தெரிந்தும் தெரியாமலும், தெரிந்தும் படிக்காமலும் இனித்தான் விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் அது உண்மை அல்ல. அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி அந்த பிரேரணை செப்டெம்பர் மாதம் அதற்கான நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்ற பதில் தான் நிறுவப்படவேண்டியதாகவுள்ளது.

மற்றும் உள்ளக விசாரணையைப் பற்றி பேசுகின்றார்கள். அது நாம் விரும்பி கேட்ட ஒன்று அல்ல. தற்போது அமைச்சராக இருக்கின்ற மகிந்த சமரசிங்க நவநீதம்பிள்ளை பிரேரணை சமர்ப்பித்தபோது அந்த சபையில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசினார். முழுவதும் உண்மைக்கு மாறான விடயங்களை பேசினார். உடனடியாக அங்கிருந்த இராஜதந்திரிகள் ஊடாகவும் அங்கிருந்த எமது வழங்கறிஞர்கள் ஊடாகவும் எங்களுக்கு ஒரு செய்தி தரப்பட்டது. அதாவது இவ்வாறு மகிந்த சமரசிங்க பேசியுள்ளார். நீங்கள் 24 மணி நேரத்தில் பதில் தரவேண்டும் என. நாங்கள் 19 ஆவது மணி நேரத்தில் 14 பக்கத்தில் தெளிவான அறிக்கையை நாம் அனுப்பியிருந்தோம். அதற்கு பாராட்டு தெரிவித்திருந்தார்கள். பகிரங்கமாக சொன்னார்கள்.

அதன் பின்னர் அவ் அறிக்கை மீது விவாதங்கள் ஏற்படுத்திய போது இந்தியா போன்ற நாடுகள் தங்கள் தங்கள் நாட்டுக்கெதிராகவும் இவ்வாறான தீர்மானங்கள் கொண்டு வரமுடியம் அதனூடாக சர்வதேச விசாரணை வந்துவிடும் என அவர்கள் மிக கவனமாக இருக்கின்றார்கள். இவ்வாறான தீர்மானத்திற்கு ஆதரவு தருவதற்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப்பொரிய பொருளாதாரத்தை செலவழித்திருந்தார்கள். தமது முழு சக்தியையும் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்ற பயன்படுத்தினார்கள். அதனூடாக வென்றெடுத்தே இந்த பிரேரணையை தற்போது நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

சிலர் ஜெனிவாவில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த பிரேரணை சர்வதேச விசாரணை இல்லை என்று கூறினார்கள். அவர்களே தற்போது இங்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கனவில் இருந்து மீண்டவர்கள் போல் அதனுடைய பின்னணி அதனுடைய வரலாறு, என்ன நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை நன்றாக தெரியாமல் இன்று தமிழரசுக்கட்சி மீது குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். அது முடியாத காரியம்.

இந்த தேர்தலிலும் எம்மை குற்றம் சுமத்தினார்கள் எம்மை தோற்கடிப்பதற்காக பல கோடி ரூபாக்களை செலவழித்தார்கள். தலைமையை மாற்றி அமைக்க முனைந்தார்கள். அதற்கு நாம் பதில் கொடுத்தோம். இன்று அவர்கள் 6 வாக்கு குறைந்திருந்தால் கட்டுப்பணமே இல்லாமல் போயிருப்பார்கள். அதேபோல் 6 வாக்கு எமக்கு கிடைத்திருந்தால் 6 ஆவது இடம் எமக்கு கிடைத்திருக்கும். ஆனால் அது யாருக்கு போயிருக்கின்றது. ஐக்கிய தேசியகட்சியை தேர்ந்தேடுப்பதற்கு செய்திருக்கின்றார்கள்.

இன்று போராளிகள் என்று ஒன்றை தொடக்கினார்கள். இன்று அவ்வளவு தூரம் அவமானமாக்கியிருக்கின்றார்கள். நாம் மதிப்பு வைத்துள்ள அந்த போராளிகள் அவர்களை தேர்தலில் ஈடுபடுத்தி இன்று 1200 வாக்குள் மட்டில் பெற்றிருக்கின்றார்கள். அது எவ்வளவு அவமானமாகும். வெறும் அற்ப ஆசைகளுக்காக 3 ஆசனத்தை பெறுவோம் என்று கூறினார்கள்.

கஜேந்திரகுமார் அணியில் 3 பேர் வெல்வோம் என்று கூறினார்கள். இருப்பதோ 7 இடம்தான். வெளிநாட்டில் இருந்து மிகப்பெரும் தொகையானவர்கள் நிதியை வழங்கினார்கள். அப் பணம் மக்களிடம் போயிருந்தால் அந்த மக்களாவது வாக்களித்திருப்பார்கள். அடி அத்திவாரமே இல்லாதவர்களை மக்கள் எவ்வாறு அகற்றியிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு நன்கு தெரியும்.

அப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருந்து தமிழரசுக்கட்சி ஏதோ சர்வதேச விசாரணையை கோரவில்லை உள்ளக விசாரணையை கோருவது போலவும் அத்தனை உண்மைகளையும் மூடி மறைத்து தற்போது புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய வடக்கு முதலமைச்சரும் சம்பந்தப்பட்டிருக்கின்றார். ஒரு நீதியரசருக்கு அது புரியாமல் இருக்க முடியாது. அப்படி புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம். அதனை நாம் எப்படி அனுகப்போகின்றோம் என்று நாம் சில நியாயங்கள் வைத்துள்ளோம்.

2010 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் அண்டு வரை இப் பிரேரணை நிறைவேற்றப்படும் வரை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு சம்பந்தமுள்ளது. ஆனால் சம்பந்தப்படாத பலர் இருக்கின்றார்கள். தேர்தல் இறுதி காலகட்டத்தில் கஜேந்திரகுமாரிடம் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு தெரியும்.

வெள்ளைக்கொடி பிடித்துக் கொண்டு பசில் ராஜபக்சவுடனும் ராஜபச்வுடனும் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்றே கேட்டேன். எனக்கு தெரியும் அது என்ன என்று. சந்திரகாந்தனும் பசில்ராஜபக்சவுடன் பேசி ராஜபக்சவுடன் செய்தியை பெற்று வெள்ளைக்கொடியுடன் வருமாறு கேட்ட செய்தியையும் அவர்கள் ஏமாற்றி வந்தவர்களை கொன்று விட்டார்கள் என்ற செய்தியும் ஐ.நாவில் சாட்சியமாக அளித்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.

ஆனால் ஏன் கஜேந்திராகுமாரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. நான் கூறியதை பொய் என்று கூறி அம்மாவை கொண்டு சத்தியம் செய்து தான் அப்படியொன்றும் செய்யவில்லை என்று கூறுவதும் பொய் தான். உண்மை எங்களிடம் உள்ளது. அவர்களும் அவருடைய ஆட்களும் என்ன செய்தார்கள். நாங்கள் ராஜபக்சவுடனும் ரணிலுடனும் நிற்கும் படத்தை எடுத்து போட்டார்கள். அவர்களால் அதை தான் செய்ய முடியும். அவர்களால் இதைவிட அரசியல் பேச முடியாது. நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சீவிய காலத்திற்கு பதில் கூற முடியாது.

இன்று சர்வதேச விசாரணை தேவை என மனித உரிமை பேரவைக்கு அனுப்ப கையெழுத்து வாங்குகின்றார்கள். சரி வாங்கட்டும் விழிப்புணர்ச்சி தேவையானது. நாங்கள் அதற்கு தடையாக இருக்கமாட்டோம். ஆனால் உண்மையை பேசுகின்ற அந்த தத்துவம் துடிப்பு எங்களுக்கு தெரியவேண்டும்.

எங்களுடன் கூட இருக்கின்ற 3 கட்சிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரன், செலவ்ம் அடைக்கலநாதன் அமெரிக்காவில் பேசுகின்றபோது எங்களுடன் வந்திருந்தார்கள். பிரேரணை நிறைவேற்றும் போது எங்களுடன் இருந்தார்கள். தற்போது அவர்கள் மூன்று பேரும் ஒரு இடத்தில் கூடி போர்க்குற்ற விசாரணையே தேவை என கூறுகின்றார்கள். அது எப்போதோ நிறைவேற்றப்பட்டாகிவிட்டது.

ஒரு நாட்டைப்பற்றி ஒரு விசாரணை கொண்டு வரப்படுகின்ற போது உள்ளக விசாரணை இடம்பெறவேண்டும். அந்த நாட்டின் இணக்கத்துடன் கொண்டு வரப்படவேண்டும். அதுவே அதனுடைய சாராம்சம்.

எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணை பற்றி தெரிவிக்கப்பட்டு நாங்கள் அதனை வலுவூட்டி சிறந்த போர்க்குற்ற விசாரணை இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதற்கு மக்கள் அங்கீகாரத்தை பெருவாரியாக வழங்கியுள்ளார்கள். அதைவிட கையெழுத்து எவ்வளவு பெறுமதியாக இருக்கபோகின்றது என தெரிவித்தார்.

Related Posts