சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது: விரைவில் அறிக்கை

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஞாயிறன்று கொழும்பில் கூடிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் (டெலோ, ஈபிஆர்எல்எஃப், புளொட்) நான்காவது பெரிய கட்சியான தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான ஆட்களை நியமிப்பதில் இந்த கட்சிகளுக்கு அதிருப்தி நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் பின்னணியில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய 3 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கொழும்பில் இரண்டாவது முறையாக கூடி தமக்குள் விவாதித்திருந்தனர்.

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணை அறிக்கையின் அடுத்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணையும் சர்வதேச விசாரணையாக அமைய வேண்டியதன் அவசியம், அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவன ரீதியாகச் செயற்பட வேண்டியதன் தேவைகள், முக்கியத்துவம் என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டம் குறித்தும், அதில் தமிழரசு கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை குறித்தும் கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர், இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணையையே தாமும் தமது கட்சியும் வலியுறுத்தி வந்ததாகவும், சென்ற ஆண்டு பங்குனி மாதம் சர்வதேச விசாரணை கோரி ஒரு ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த சர்வதேச விசாரணை நடைபெற்றிருப்பதாகவும், அந்த அறிக்கை சிலநாட்களில் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

Related Posts