சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு! ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பந்தன்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு” – என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பைத் தனது திருகோணமலை இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கமும் கலந்துகொண்டார்.

‘இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசின் உள்ளக விசாரணை அவசியமில்லை; சர்வதேச விசாரணையே தமக்கு அவசியம் என்று உலகத் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு’ – என்று ஊடகவியலாளாகளால் இந்தச் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை, மூதூரில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் சேவையாற்றிய 17 பேர் மற்றும் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட 5 மாணவர்களின் விடயம் தொடர்பாகவும் உள்ளகப் பொறிமுறையூடாக விசாரணை செய்ய சர்வதேச நிபுணர்களை இலங்கை அரசு அன்று நியமித்தது.

ஆனால், என்ன நடந்தது? அந்த உள்ளக விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த சர்வதேச நிபுணர்கள் கூறியது என்ன? இலங்கை அரசுக்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஊடாக உள்ளக விசாரணை செய்ய விருப்பம் இல்லை எனக் கூறி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

அதற்குப் பின்னர் விசாரணை ஒருவாறாக இடம்பெற்று அறிக்கை அன்றைய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை எங்கே? அந்த அறிக்கை அழிக்கப்பட்டது வெளிவரவில்லை.

இவ்விதமான ஒரு சூழலில் இலங்கை அரசின் உள்ளக விசாரணை மீது நம்பிக்கை வைக்கும்படியாக தமிழ் மக்களிடம் எப்படி நாங்கள் கேட்பது? எமது மக்களுக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் சர்வதேச விசாரணையை அவர்கள் கேட்கின்றார்கள்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைத் தமிழர்கள் கேட்பதற்கு போதிய நியாயம் உண்டு. ஆனால், தற்போது சர்வதேச விசாரணை 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. சில நாட்களில் சர்வதேச விசாரணை வெளிவரவுள்ளது. அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் இவ்வாறான பல கேள்விகளுக்கு முடிவு வரும் என நான் நினைக்கின்றேன்” – என்றார்.

Related Posts