வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு சர்வதேச விசாரணையே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யப்பானிய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் மறிக்கோ யமமோடோ சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை தான் என்று சொல்லி வருகின்ற நிலையில் அது பற்றி எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசாங்கம் அவ்வாறு சொல்வது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையின் நிலைப்பாடு தெளிவானது. போர் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை சார்ந்த தனித்துவமான சர்வதேச விசாரணையை நாங்கள் கேட்டு நிற்கிறோம். அதில் எந்த விதமாற்றமும் கிடையாது.
அடிப்படை மனிதஉரிமைகள் மீறி பல வருடங்களாக விசாரணைகள் மற்றும் குற்றசாட்டுகள் இன்றி சிறையில் அடைத்து வைக்கப்படிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அநாதரவான சிறுவர்கள் மற்றும் வலுவிழந்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். இவர்களுக்கான திட்டங்களை நாங்கள் வரைகின்ற பொழுது நிதிவசதியின்மை தடையாக இருக்கிறது அதற்கான ஆதரவை இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எங்களுக்கு உதவ வேண்டும்.
பொருளாதார வளர்சியை நோக்கி நகர்வதற்கான நிதிவசதிகளை யப்பான் அரசாங்கம் வடக்கு மாகாணத்துக்கு வழங்க வேண்டும். குறிப்பாக ஜப்பானிய அரசாங்கம் எங்களுடைய நலன்களில் கூடிய அக்கறை செலுத்தவேண்டும். இனப்பிரச்சனைக்கு சமஸ்டி முறையிலான தீர்வை காண்பதற்கு சர்வதேசத்தோடு இணைந்து யப்பானிய அரசாங்கம் உதவவேண்டும் சர்வதேசத்தோடு இணைந்தது இலங்கை அரசாங்கத்துக்கு இனப்பிரச்சனை தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.