சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இது சர்வதேச விசாரணையில்லை என்று கூறி இந்த அறிக்கைக்கான பிரேரணையை ஜெனிவாவில் எரித்து, சர்வதேச ஒரு கூட்டத்தினர் மக்களைக் குழப்பினர். இப்போது புரிந்திருக்கும், நடந்தது சர்வதேச விசாரணைதான் என்று. நேற்றுவரை எம்மை ஏசி விட்டு இன்று மகிழ்ச்சி தெரிவிப்பவர்களும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில், சர்வதேச விசாரணைக்கான தீர்மானமே கொண்டு வரப்படுகின்றது என்று நாம் சொன்னபோது, இங்குள்ள சிலரும், வெளியிலிருந்து சிலரும் நாம் பொய் சொல்கின்றோம் என்று தெரிவித்தனர். நாம் உண்மையை மறைக்கின்றோம், தலைமையை மாற்றவேண்டும் என்றனர். ஆனால் மக்கள் தெளிவாக இருந்தனர்.
தற்போது வெளிவந்துள்ள ஐ.நா. அறிக்கை தொடர்பில் பலர் பலவிதமாகப் பேசினார்கள். இருப்பினும் சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விசாரணையின் அடிப்படையில் அறிக்கை வெளிவந்துள்ளது. இது தொடர்பில் நாம் முன்னரே தெளிவாகக் கூறியிருந்தோம். மனித உரிமை ஆணையாளரின் அனுமதியோடு 3 நீதிபதிகள் வெளியிலும், உள்ளுரிலும் விசாரணை மேற்கொண்டனர்.அதன் அறிக்கையே தற்போது வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையானது கடந்த மார்ச் மாதமே தயாரித்து முடிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் இனிவர வேண்டியது சர்வதேச பொறிமுறைதான். இதையே நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன்.
நான் எப்போதும் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்று கூறியது கிடையாது. ஆனால் அண்மையில் கூறியது இன்னுமொரு விசாரணை தேவை இல்லை என்றே கூறியிருந்தேன்.
ஆகவே இனிமேல் தேவைப்படுவது, சர்வதேச விசாரணையின் பொறிமுறைதான் என்றேன். அதுதான் தற்போதைய அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.எது சர்வதேச விசாரணை என்று தற்போது மக்களுக்குப் புரியும். இனிமேலாவது இவர்கள் தீர ஆராய்ந்து பார்க்கவேண்டும். உண்மைக்கு மாறான கருத்தைப் பரப்பாமல் இருக்கவேண்டும். முடிந்த வரை அனைவரும் ஒரே மாதிரியான கருத்துக்களைச் சர்வதேசத்தின் முன்கொண்டு செல்ல வேண்டும்.
இதேவேளை, தனித்துச் சர்வதேசம் பற்றி மட்டுமே பேசாமல் அதனுடன் வீழ்ந்து கிடக்கின்ற எமது இனத்தையும் சிதைந்து போய் உள்ள தேசத்தையும், சீரழியும் வாழ்வையும் பற்றியும் சிந்திக்க வேண்டும்.
இன்று மகிழ்ச்சி தெரிவிக்கும் சிலர் நேற்றுவரை எம்மை ஏசியவர்கள். இருப்பினும் தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின் பின்பு எவ்வாறு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும். அரசியல் ரீதியாக நாம் தவறு இழைத்தால் மக்கள் கேள்வி எழுப்பலாம் என்றார்