Ad Widget

சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல் ஜெனீவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணி

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, ஜெனீவா நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதற்கிடையே, அமெரிக்க வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் விவாதம் தொடங்கியது.

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
போர்க்குற்றம்

போர் விதிமுறைகளை மீறி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. மனித உரிமைகள் மீறப்பட்டன. ஏராளமான தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் சிறை பிடித்துச் செல்லப்பட்டனர். இறுதிக்கட்ட சண்டையின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையம் சமீபத்தில் தனது விசாரணை வரைவு அறிக்கையை வெளியிட்டது.

அதில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த யோசனையை ஏற்க மறுக்கும் இலங்கை, தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு மேற்கொண்ட தீவிர நல்லிணக்க நடவடிக்கைகள் காரணமாக நிலைமை பெருமளவில் மாறி இருப்பதாகவும், எனவே சர்வதேச நீதிபதிகள் குழு விசாரணை தேவை இல்லை என்றும், இந்த நிலைப்பாட்டுக்கு மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.

தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் 30–வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரிக்க வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்து உள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அமெரிக்காவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வரைவு தீர்மானம், இலங்கைக்கு ஆதரவான அம்சங்களை கொண்டு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த தீர்மானம் வருகிற 24–ந் தேதி (வியாழக்கிழமை) மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு தீர்மானத்தில் மீது விவாதம் நடைபெறும். இந்த தீர்மானத்தில் நகல் ஏற்கனவே இலங்கையிடம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரைவு தீர்மானம் மீது கருத்து அறியும் சாதாரண கூட்டம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறை ஒன்றில் நேற்று நடைபெற்றது. இது தொடர்பான விவாதத்தில் பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இலங்கையில் இருந்து முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் மற்றும் புலம் பெயர்ந்த மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை அரசின் தூதர் ரவிநாத ஆர்யசின்கா, வரைவு தீர்மானத்தில் உள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதுபோன்ற செயல்பாடுகள் இலங்கையின் இறையாண்மையை பாதிப்பதாக கூறினார். கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான கருத்தை கொண்டிருந்த பல நாடுகள் இந்த முறை அத்தகைய கருத்தை வெளியிட தயக்கம் காட்டின.
தமிழர்கள் பேரணி

இதற்கிடையே, ஜெனீவா நகரில் நேற்று பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும், இன அழிப்புக்கு நீதி கேட்டும் நடைபெற்ற இந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியில் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த தமிழர்கள் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை சென்று அடைந்தது.

அங்கு போய்ச் சேர்ந்ததும் ஊர்வலத்தினர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
இலங்கை அவசர கடிதம்

இந்த நிலையில், இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் பற்றிய விசாரணையை உள்நாட்டு குழுவே விசாரிக்க ஆதரவு தர வேண்டும் என்று கோரி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 47 நாடுகளுக்கு இலங்கை அரசு அவசர கடிதம் எழுதி இருக்கிறது.

அதில், இறுதிக்கட்ட போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு நீதித்துறையில் சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

மனித உரிமை மீறல் குறித்த விசாரணையை சர்வதேச நீதிபதிகள் உதவி இன்றி இலங்கை குழுவினரால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் விசாரிக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் இலங்கை தெரிவித்து இருக்கிறது.

Related Posts