சர்வதேச விசாரணைக்கு இடமேயில்லை! மீண்டும் உறுதியாக சொல்கிறது அரசு!!

“இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய அரசு கூடிய அவதானம் செலுத்துவதனூடாக நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யவுள்ளதாகவும், நவீன தொழில்நுட்பப் பயன்பாடுகளுடன் கூடிய வலுவான பாதுகாப்புத்துறையை எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்குள் உருவாக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று சுபநேரத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் உறையாற்றும்போதே அவர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஆசீர்வாதத்துடன் இந்த அமைச்சை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதன்மூலம் நாங்கள் ஆரம்பத்தில் அமைத்த குறுகியகால அரசில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் பல திட்டங்களை வகுத்திருந்தேன். அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டில் 30 வருடகாலமாக கொடிய யுத்தம் இருந்தது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவத்தினருக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்கள். அந்தவகையில் அவர்களுக்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

மரணித்த இராணுவச் சிப்பாய்களது குடும்பத்தினருக்கும், ஊனமுற்ற இராணுவச் சிப்பாய்களது தேவைகளையும் நாங்கள் பூர்த்திசெய்துகொடுப்போம். நாங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதன்மூலம் தேசிய பாதுகாப்பை மேலும் உறுதிசெய்வோம்.

அது மட்டுமல்லாது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வலுவான பாதுகாப்புத்துறையை எதிர்வரும் 5 வருட காலத்துக்குள் ஏற்படுத்தவுள்ளோம். இவற்றின்மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு வாழ்வதற்கு சுதந்திரமான சூழலை ஏற்படுத்துவோம்.

ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார். அதற்கமைய எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுமூலம் நேர்மையாகச் செயற்படுவேன். சட்டம் அனைவருக்கும் சமமாகும். என்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு நிரூபிக்கப்படுமாயின், நான் தண்டனை அனுபவிக்கத் தயாராகவே உள்ளேன்” – என்றார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்ததுடன், பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts