பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு பேரவையால் அவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சர்வதேச நீதிபதிகளை பொறுத்தவரை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆலோசனை பெறப்பட்டு சகல விடயங்களும் மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்ட நல்லிணக்க செயலணியின் இறுதி அறிக்கையிலேயே இவ்விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள், விசாரணையாளர்களை பொறுத்தவரையில் சகல இன பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதோடு, யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவது சட்டவிரோதமானதென தெரிவித்துள்ள நல்லிணக்க செயலணி, மனித குலத்திற்கு எதிரான குறித்த குற்றங்களுக்கு விசேட நீதிமன்ற ஆணை வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, குற்றத்தின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை என்பனவற்றை கருத்திற்கொண்டு விசேட வழக்குறைஞர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென்றும் அதன் அலுவலர்கள் சர்வதேச பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பயங்கரவாத அல்லது குற்றவிசாரணை பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்படக் கூடாதென கூறப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் போராளிகளின் நிலைமை மீள பரிசீலிக்கப்பட வேண்டுமென்றும் காணிகளை இழந்த மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் குறித்து ஆணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி தமது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.