சர்வதேச நீதிபதிகளுக்கு இங்கு இடமேயில்லை! ஜனாதிபதி

“இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை என்ற தொனியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் இந்தக் கூற்றை நிராகரிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவருவது மற்றும் வெளிநாட்டு இராணுவ நீதிமன்றங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு இடங்களில் என்ன கருத்தைத் தெரிவித்தாலும் நான் அதற்கு அனுமதிக்கப்போவதில்லை” என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

“இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவித தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி, “நாட்டின் சுதந்திரம் மற்றும் விடுதலைக்காக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கமாட்டேன்” எனவும் மேலும் கூறினார்.

Related Posts