சர்வதேச தலையீட்டில் விசாரணை வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாகும்.

எக்காரணத்தை கொண்டும் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது என பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டது.

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஜெனிவா செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவிய போதே கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத் தொடருக்கு தனிப்பட்ட ரீதியில் எவருக் கலந்துகொள்ள முடியும். தனிப்பட்ட முறையில் சில உறுப்பினர்கள் ஜெனிவா செல்லக் கூடும். அவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களா அல்லது வேறு யாருமா என்பது தொடர்பில் எம்மால் எதையம் குறிப்பிட முடியாது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாரும் ஐ.நா கூட்டத் தொடரில் கலந்துகொள்வது தொடர்பில் இன்னும் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும் சரியான கால எல்லை எப்போது என்பது தெரியவில்லை. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா பேரவையில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும். எமது ஜெனிவா பயணம் குறித்த தீர்மானம் ஐ.நா விசாரணை அறிக்கையிலேயே தங்கியுள்ளது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையில் உள்ளக விசாரணை பொறிமுறை முன்னெடுக்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டாலும் இந்த அறிக்கையில் எவ்வாறான வலியுறுத்தல் அமையும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது. கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் பலமானதொரு சர்வதேச விசாரணை நடவடிக்கை ஒன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட தீர்மானத்துக்கு அமைய பலமான சர்வதேச விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இப்போது வெளிவரவிருப்பது அந்த விசாரணை தொடர்பான விசாரணை அறிக்கையேயாகும்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இன்னும் இந்த சர்வதேச விசாரணை பொறிமுறையை கைவிடவில்லை. இப்பொது ஐ.நா பேரவையினால் வெளியிடப்படும் அறிக்கை பலமான காரணங்களை முன்வைக்கும் என நாம் நம்புகின்றோம்.ஆனால் அவர்கள் எவ்வாறான பொறிமுறைகளை முன்வைக்கபோகின்றனர் என்பது தொடர்பில் எவ்விதமான காரணங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆகவே இப்போது ஒருசிலர் முன்வைக்கும் காரணங்களை வைத்துக்கொண்டு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்ப்புடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. சர்வதேச தலையீட்டில் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் எனக் குறிப்பிட்டார்.

Related Posts