மேற்குகிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார்.
கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி, நேற்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு, ஆண்டிகுவாவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் அஷ்வின் அரை சதம் கடந்தார். அபாரமாக ஆடிய விராட் கோஹ்லி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் அன்னிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை படைத்தார். இரட்டைச் சதமடித்தவுடன் மண்ணை முத்தமிட்டார். இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் எழுந்து நின்று விராட் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் விராட் கோஹ்லிக்கு கைகுலுக்கி வாழ்த்தினர். உணவு இடைவேளைக்கு பின்னர் பேட்டிங்கை தொடர்ந்த விராட் கோஹ்லி அவுட் ஆகி வெளியேறினார்.
இந்திய அணி எட்டுவிக்கெட்டுக்களை இழந்து 566 ஒட்டங்களை பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்கை இடைநிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து முதலாவது இனிங்சிற்க்காக துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஒட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.