வடக்கு, வடமேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளையொட்டி இலங்கை வந்திருக்கும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
கடந்த 13 ஆம் திகதி 12 நாடுகளிலிருந்து 30 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் பணிப்பின் பேரில் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் அனைத்து கண்காணிப்பாளர்களும் வட மாகாணத்திலேயே தேர்தல் கண்காணிப்பை ஆரம்பிப்பார்கள்.
இதற்கிணங்க இவர்கள் இன்று முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தமது பணிகளை ஆரம்பிப்பார்கள்.
தேர்தல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் 20 கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவும் பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில் தமாது மக்புல் என்பவரது தலைமையில் 09 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றுமே வட மாகாணத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகளை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த 05 கண்காணிப்பாளர்களும் தற்போது இலங்கை வந்துள்ளனர்.
இவர்கள் கடந்த இரு தினங்களுக்குள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், ஏனைய தேர்தல் அதிகாரிகள், மற்றும் உள்நாட்டில் இயங்கம் கண்காணிப்பு அமைப்புகளை சந்தித்துப் பேச்சு நடத்தியிருப்பதுடன், தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளினதும் களநிலவரம் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலேயே வடக்கில் தமது தேர்தல் பணிகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனசெத்த பெரமுன ஆகிய அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியதுடன், அவர்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
எதிர்வரும் 21ம் திகதியன்று நடைபெறும் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை கண்காணிப்பதற்காக 5,000 பேர் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். உள்ளூர் கண்காணிப்பாளர்களுடன் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் இதில் அடங்குவர்.