சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்: சம்பந்தன்

TamilNational_Sampanthan (1)சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று மாலை வவுனியா நகர விடுதி ஒன்றில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கூட்டம் ஆரம்பித்த வேளையிலிருந்து தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் சம்பந்தன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மக்களுடைய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த சம்பந்தன், சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.

மக்களை விட்டு தான் ஒருபோதும் விலகமாட்டேன் எனவும் கட்சியின் ஒற்றுமைக்காகவும் கட்சியின் வெற்றிக்காகவும் அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.

கட்சியின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் தானாக முன்வந்து முதலமைச்சர் வேட்பாளர் தெரிவிலிருந்து விலகிக் கொண்ட மாவை சேனாதிராஜாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும்,

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனது முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை மனதார ஏற்று வட மாகாண சபைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனவும் இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையை வைத்துக் கொண்டு மக்களுக்காக தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என குறிப்பிட்டார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெறவிருந்த இக்கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென கட்சியின் உயர்மட்டத்தால் குறித்த விடுதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான கூட்டம் இரவு 10.30 வரை தொடர்ந்தது.

ஊடகவியலாளர்கள் எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படாத அதேவேளை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சரவணபவன், பொன்.செல்வராசா, சுமந்திரன் மற்றும் மத்திய செயற்குழுவின் ஒவ்வொரு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நியமனக் குழு கூட்டம் இன்று காலை வவுனியாவில் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Related Posts