சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: முதலமைச்சர்

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இதுவரை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்கான நம்பகத்தன்மையான விசாரணைப் பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.

சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பதை இவ்வாறான விசாரணைகளின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts