உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இந்தியாவின் இராஜதந்திரப் போக்குளையும் செயற்பாடுகளையும் உணர்ந்து செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, செவ்வாய்க்கிழமை (26) மாலை தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 86ஆம் ஆண்டு பிறந்த தின நிகழ்வை நினைவுகூறும் வகையில் ‘இலட்சிப்பாதை’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளை கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடாது, நாங்களும் வெளியிடமாட்டோம். ஏனெனில், இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய காலகட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்’ என்றார்.
‘உலக நாடுகள் தமக்குள் இராஜதந்திர ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளன. அந்தவகையில், பொருளாதார ரீதியாக அமெரிக்கா – ரஸ்யா, இந்தியா – சீனா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் கூட்டாக உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு பொருளாதார ரீதியாக செயற்படுகின்றன.
அன்றைய காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியின் கொள்கைக்காக பதவியைத் துறந்தவர் தான் நீலன் திருச்செல்வம். கட்சியின் கொள்கையை கருத்திற்கொண்டு தலைமைக்கு கட்டுப்பட்டு தனது பதவியைத் துறந்தார்.
ஆனால், இன்று பலர், கட்சித்தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ளாது, பதவிகளுக்காக போராட்டங்களை நடத்தும் நிலைமைகள் தான் காணப்படுகின்றன.
அன்றைய காலகட்டத்தில், கட்சிக்கொள்கைக்கு கட்டுப்படாமல் செயற்பட்டமையால் தான், ஊர்காவற்றுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் மற்றும் யாழ்ப்பாணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் போன்றவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்’ என அவர் சுட்டிக்காட்டினார்.