சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை-ஜனாதிபதி

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை. அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு நாட்டை பாதுகாப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithri-matara-meeting-

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு முன்னர் இலங்கை எவ்வாறு இருந்தது என்பதை தற்போது எம்மை தேசத்துரோகிகள் என கூறுபவர்களிடம் கேட்க விரும்புகின்றேன். அனைத்து சர்வதேச நாடுகளினாலும் இலங்கையை தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. பொருளாதாரம் படுபாதாளத்தில் இருந்தது. நாட்டின் எதிர் காலம் தொடர்பில் உறுதியற்ற நிலைப்பாடே காணப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அனைத்து சவால்களை எதிர் கொண்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் காணப்பட்ட அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மெதுவாக சர்வதேசத்தை வெற்றிக் கொண்டோம். பொருளாதார தடைகளில் இருந்து நாட்டை பாதுகாத்தோம்.அதை விட நாட்டில் ஜனநாயகம் , சுதந்திரம், மற்றும் பொருளாதார வெற்றி என்பவற்றை அடைந்தோம். இதுவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு வெற்றி என்பதை எம்மை கேள்வி கேட்பவர்களுக்கு கூற விரும்புகின்றேன்.

எம்மை கவிழ்ப்பதற்கு புதிய கட்சி அமைக்கின்றனராம் . அதனை எதிர் கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். இதுவரைக்காலமும் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் வெளியிடப்படும். அப்போது புதிய கட்சி அமைப்பாவர்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலையே ஏற்படும். நல்லாட்சியில் அமைதியான மக்கள் வாழ்விற்கே முதலிடம். இனி எந்தவொரு காலத்திலும் ஆயுதம் ஏந்தும் நிலை எந்தவொரு இன மக்களுக்கும் ஏற்படாது. சில சந்தர்ப்பங்களில் எமது அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு உடனே தெரிவதில்லை. கடந்த ஆட்சியில் முன்னெடுத்த அபிவிருத்தி திட்டங்களின் சுமையை இன்று நாங்கள் சுமக்கின்றோம். பாரிய ஊழல் மோசடிகளினால் நாட்டை பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டனர். போதாதற்கு சர்வதேசத்தில் பகைமையை வளர்த்து நாட்டின் எதிர்காலம் பேராபத்திற்குள் சென்றது. ஆனால் தற்போது அனைத்து விதமான சவால்களையும் வெற்றிப் கொண்டு முன்னோக்கி செல்கின்றோம்.

வீதி வீதியாக அன்று சர்வதேச நீதிமன்றம் மின்சார கதிரை என கூறி திரிந்தவர்களுக்கு இன்று அவ்வாறு கூற வேண்டிய நிலை இல்லை . சர்வதேச தீர்மானங்களின் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டுள்ளோம். காணாமல் போனவர்கள் தொடர்பில் அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய போது இராணுவத்தை காட்டிக் கொடுப்பதாகவும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குவதாகவும் கூறினார்கள். அவ்வாறு எதுவம் இல்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் சுயாதீன தன்மை என்பவற்றின் மீது பொறுப்புடனேயே செயற்படுகின்றோம். பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு எமக்குள்ளது. ஆட்சியை கவிழ்ப்பதாக கூறுபவர்களுக்கு ஒன்றை கூறுகின்றோம். எமது ஆட்சி 2020 ஆம் ஆண்டு வரை வெற்றி நடைப்போடும். அதற்கு பின்னர் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நானும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த ஓராண்டு கால வெற்றி பாரியதாகும் . அதன் பலன் மக்களுக்கு இன்னும் சில நாட்களில் வெளிப்படும். எமது ஆட்சியில் மோசடிகளுக்கு இடமில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு சிக்கினால் அவர்களுக்கு ஏனையோருக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதிப்பட கூறுகின்றேன். மோசடி ஆட்சி மீண்டும் நாட்டில் இடம்பெற இடமளியோம்.

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு சர்வதேசத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இலங்கையை மீண்டும் உயரத்தியுள்ளோம். இதற்கு காரணம் நானும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தமையாகும். ஐக்கிய நாடுகள் சபையையும் வெற்றிக் கொண்டு விட்டோம். இனி எஞ்சியுள்ள சவால்களையும் எதிர் கொள்வோம் என்றார்.

Related Posts