ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 117வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செலயகத்தில், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியது.
இதன்போது, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அனுசரனை வழங்கிய தீர்மானம் நிறைவேற்றப்படாமைக் குறித்து சுட்டிக்காட்டிய எம்.கே.சிவாஜிலிங்கம், அதனை நிறைவேற்ற சர்வதேசத்தின் அழுத்தம் அவசியம் என்பதை வலியுறுத்திய பிரேரணையை முன்வைத்தார்.
மேற்படி பிரேரணையை வடமாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வழிமொழிந்தார். இறுதியாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இத்தீர்மானத்தினை நிறைவேற்றுவதாகவும் அதன் பிரதிகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் சபையில் அறிவித்தார்.
சிவாஜிலிங்கம் தனது பிரேரணையில், இனப்படுகொலைக்கான தீர்மானத்தினை சபையில் நிறைவேற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் சர்வதேச நீதிப் பொறிமுறையினை அமுல்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திடம் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள் போன்றவற்றினை ஊக்கப்படுத்தல் என்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கையினையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் கூறினார்.