சர்வகட்சி மாநாடு சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கச்செய்யும்! : மாவை

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று விடயங்களை செயற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் செயற்பாட்டை இழுத்தடிக்கும் சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் யாப்பை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இச் செயற்பாடானது சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம், அரசியலமைப்பு நிர்ணய சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மாவை மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்கும் பட்சத்தில், பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மாவை எச்சரித்தார்.

இந்நிலையில், புதிய அரசியல் யாப்பின் ஊடாக வடக்கு கிழக்கை இணைத்து, சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதன்மூலம், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையிலான சுயாட்சி அலகொன்றை வழங்குவதற்கு தயாரென மாவை இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts