சர்ச்சைக்குரிய பேச்சு: டெல்லி போலீசில் அமீர்கான் மீது புகார்

நடிகர் அமீர்கானின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, டெல்லி புது அசோக்நகர் போலீசில் அங்குள்ள வசுந்தரா என்கிளேவ் பகுதியில் வசிக்கும் ஒருவர் புகார் செய்துள்ளார்.

அதில் அவர், “நானும் இந்த நாட்டின் குடிமகன்தான். பிரபலங்கள் பேசுவதற்கு முன், நாம் என்ன பேசுகிறோம் என்று எண்ணிப்பார்த்து பேச வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். “அமீர்கான் எந்த சமூகத்தில் வசித்து வருகிறார் என்பதை கூற வேண்டும்” என்றும் கூறி உள்ளார்.

புகாருடன் இந்திய அரசியல் சட்டம் கூறியுள்ள அடிப்படை கடமைகளையும் சுட்டிக்காட்டி உள்ளார். அதில், பிரிவு இ, சமூகத்தின் அனைத்து மக்களிடமும் சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவது பற்றி கூறி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீர்கானுக்கு எதிரான புகார் குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் குர்ஜார் கருத்து தெரிவிக்கையில், “அமீர்கான் பேச்சு பற்றி எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. அதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:-

இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை இஸ்லாம் சார்ந்த நடவடிக்கையாக அந்த நபர் கருதலாம். ஆனால், ஒரு முஸ்லிமாக இதைப்பார்க்கும் என்னால் இஸ்லாம் சார்ந்த அவனது செயலாக இதைப் பார்க்க முடியவில்லை.

அப்பாவி மக்களை கொல்பவர்கள் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை அவன் ஒரு முஸ்லிமே அல்ல. நான் முஸ்லிம்தான் என்று கூறிக்கொள்ள அவன் முன்வரலாம். ஆனால், அவனை நாம் அப்படி அங்கீகரித்து விடக்கூடாது. அவன் தீவிரவாதி, ஒரு தீவிரவாதியாகவே அவனை அங்கீகரிக்க வேண்டும்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, இதைப்போன்ற தீவிரவாத எண்ணம் கொண்ட அனைவருக்குமே இது பொருந்தும். இன்று, அது ஐ.எஸ். இயக்கமாக இருக்கலாம். நாளை, வேறேதாவது ஒரு இயக்கமாக இருக்கலாம். தீவிரவாத சிந்தனை என்பது கவலைக்குரிய விவகாரமாகவே எனக்குத் தோன்றுகின்றது.

இதுபோன்ற தீவிரவாத சிந்தனை எங்கிருந்து புறப்பட்டாலும் அதன் விளைவு, எதிர்மறையாகவும், பேரழிவாகவும்தான் இருக்கும் என்றே நான் உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts