பிரித்தானியாவின் சேனல் – 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட குறித்த நிகழ்ச்சியில் பிள்ளையான் குழுவில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா முக்கிய தகவல்களை முன்வைத்திருந்தார்.
ஆசாத் மௌலானா என்பவர் இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர் ஆவார்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் ஊடாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
விசேடமாக லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விடயங்களுக்கு இந்த காணொளியில் அதிகளாவான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ஆசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.
பிள்ளையான் குழுவுடன் இணைந்து திரிபோலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை உருவாக்குவதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், அவர்களை ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை அமைதிப்படுத்த பயன்படுத்தியதாகவும் ஆசாத் மௌலானா தெரிவித்திருந்தார்.
இங்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மை தகவல்களுக்காக, கானியா பிரான்சிஸ் வெள்ளைவேன் குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷட அதிகாரி நிசாந்த சில்வா, வெள்ளைகொடி வழக்கின் சாட்சியாக இருந்த ஊடகவியலாளர் ஃபிரடெரிகா ஜான்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத வேறு சில நபர்களின் அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
அதேநேரம் குறித்த காணொளியில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலுள்ள அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அப்போதைய இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே மற்றும் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும் அதில் சஹாரான் உள்ளிட்ட 6 தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டதாகவும் அசாத் மௌலானா தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஸ் சாலே, ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சேனல் 4 செய்தி சேவைக்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயர்’ இடம் புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே தொடர்பாக குறித்த வேலைத்திட்டத்திற்கு தகவல் வழங்கியவர்களால் நான்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே குறித்த கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதுடன் தன் மீதான குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார். இது தொடர்பான காணொளியும் செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டது.