சரியான அரசியல் தலைமையை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் அபிவிருத்தியை மட்டுமன்றி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் அண்மையில் இடம்பெற்ற யாழ்.பொதுமக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் கடந்த கால யுத்தத்தால் பல்வேறுபட்ட அழிவுகளுக்கு முகங் கொடுத்தும் இழப்புகளை சந்தித்தும் நிர்க்கதியான வாழ்விற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்பிரகாரம் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கீழான செயற்திட்டங்களும் எமது பகுதிகளிலும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில், இவ்வாறான அபிவிருத்திகளையும் செயற்திட்டங்களையும் விரும்பாத சுயலாப அரசியல்வாதிகள் தமது சுயலாபத்தைக் கருத்தில் கொண்டு தாம் நடைமுறைப்படுத்தாமலும் நடைமுறைப்படுத்த விடாதும் தடுத்து வருகின்றனர்.
இருந்த போதிலும் கூட அரசுடனான எமது நல்லுறவு மற்றும் இணக்க அரசியல் ஊடாக எமது பகுதிகளின் அபிவிருத்தியை மட்டுமன்றி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வருகின்றோம்.
அந்தவகையில் மக்கள் மீதான அக்கறையும் அபிவிருத்திகளை விரும்புவோர்களால் மட்டுமே இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.
எனவே, எதிர்காலத்திலும் இவ்வாறான அபிவிருத்தி வாழ்வாதார மேம்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் மக்கள் சரியான அரசியல் தலைமையை தெரிவு செய்ய வேண்டுமென்பதுடன், அதனூடாகவே இப்பேற்பட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளையும் எம்மால் வென்றெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.