அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புத்தி தடுமாற்றட்டத்தினால் புலம்புகின்றார் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவின் பொது மன்னிப்புக்காக ஏங்குகிறார் என்று சரவணபவன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் குற்றவாளியாக தேடப்படும் காரணத்தினாலேயே இந்திய மீனவர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் எமது தலைவரைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது தலைவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றார்கள் என்றும், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன்வளத்தை சுரண்டுகின்றார்கள் என்றும் கூறிவருவதோடு, இப்பிரச்சினையை இந்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக 5000 மீனவர்களுடன் கடலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தப்போவதாகவும் கூறியிருக்கின்றார்.
பின்னர், இலங்கை, இந்திய அரசுகள் மீனவர் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வைக்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதையும், கடல்வலயத்தை இருநாட்டு மீனவர்களும் எவ்வாறு பகிர்ந்து பயன்படுத்துவது தொடர்பாகவும் சிலவற்றை இணங்கண்டுள்ளனர்.
நிலைமை இவ்வாறு இருக்கையில் சரவணபவன் எம்.பி, எமது தலைவர் இந்தியாவிடம் பொதுமன்னிப்புக்காக ஏங்குவதாக கூறுவது புத்திசுவாதீனமற்றவர்களின் உளறல் போல் உள்ளது.
தமிழ் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றிவரும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்ச்சிக்கவோ, அவர் குறித்து கருத்துக் கூறவோ எவ்வித அருகதையும் அவருக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் டக்ளஸ் – சரவணபவன் எம்.பி