Ad Widget

சரவணபவன் எம்பிக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

saravanabavan

வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களது காணிகள் இடித்தழிக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து ஆராய சென்றவேளை இராணுவத்தினர் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேசசபை தலைவர், உப தவிசாளர், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இதன்போது குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இராணுவத்தினர் இடித்தழிக்கும் காணிப் பகுதிக்கு வெளிப்புறத்தில் நின்று அந்தக் காணியை படம் பிடித்துக் கொண்டிருந்த வேளையில், பிர்கேடியர் என தன்னை கூறி இராணுவத்தைச் சேர்ந்தவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இங்கு படம் எடுக்க கூடாது என கூறியதாகவும் தம்முடன் வந்த ஊடகவியலாளர்களின் கமராக்களில் இருந்த படங்களை பலவந்தமாக வாங்கி அழித்ததாகவும் அவர் கூறினார்.

இங்குள்ள காணிகளை பார்க்க முடியாது என இராணுவத்தினர் கூறியதாகவும் அதற்கு தான் இது உயர் பாதுகாப்பு வலயத்தில் இல்லை என தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

எனக்கு சகல அதிகாரங்களும் இருக்கிறது எனவும் என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் எனவும் பிர்கேடியர் கூறி எச்சரித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேலும் தெரிவித்தார்.

Related Posts