சரத் பொன்சோவிடம் கடத்தப்பட்ட தனது மகனை விடுவிக்குமாறு கதறியழுத தாய்!

sarath_182006ம் ஆண்டு இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் தாயொருவர் கதறியழுத சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது.

வடமாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கலட்டி இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மிலேனியம் விருந்தினர் விடுதியில் இன்று மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்போதே தாயொருவர் 2006ம் ஆண்டு காணாமல் போன தனது 15 வயது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கண்ணீருடன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அந்த தாய் கூறியதாவது,

சாவகச்சேரி தான் எனது ஊர். எனக்கு 5 பிள்ளைகள். கணவரின் உதவிகள் எதுவும் இன்றி அவர்களை வளர்த்து வந்தேன். 2006ம் ஆண்டு எனது 15 வயதுடைய இரண்டாவது மகன் கடத்தப்பட்டார். அத்துடன் அதே ஆண்டே 16 வயதுடைய முதலாவது மகனும் வீட்டில் இருந்த வேளை இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தற்போது 3 பிள்ளைகளுடன் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது மகன் உயிரோடு தான் இருக்கிறான். இராணுவம் அவனை இன்னமும் விடுதலை செய்யாது இருக்கின்றது. எனது பிள்ளையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள்.

எனது மகனை மீட்டுத்தரும்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அனைவரிடமும் சென்று உதவி கோரினேன் ஆனால் இதுவரை எனது மகன் வீடு திரும்பவில்லை என கதறி அழுதவண்ணம் தெரிவித்தார்.

அதேவேளை சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன மகன்களின் புகைப்படங்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட முறைப்பாட்டு பத்திரம் ஆகியனவற்றையும் சரத் பொன்சேகாவிற்கு காண்பித்தார்.

2006ம் ஆண்டு இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts