ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்ற கருத்தை தெரிவிக்கவில்லை என, ச.ம.க., தலைவர் சரத்குமார் விளக்கம் அளித்த பின், அவரது உருவ பொம்மைகளை ரசிகர்கள் எரிக்கும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நேற்று, நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், சென்னையில் நடந்த, துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரஜினிகாந்த் பேசுகையில், தமிழக அரசியலில், அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
அவரது பேச்சு அரசியல் அச்சாரம் போடும் வகையில் அமைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை தி.நகரில் உள்ள, சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், சரத்குமார் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது நிருபர்கள், ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சரத்குமார், ரஜினி என் இனிய நண்பர். ஆனால், அவர் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்றார்.
சரத்குமாரின் இந்த பதில், இணையதளங்களில் வேகமாக பரவியது. உடனே, தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிர்கள், சரத்குமாரின் உருவ பொம்மை எரிக்கும் போராட்டங்களை நேற்று நடத்தினர். வேலுார், தர்மபுரி உள்ளிட்ட, வடமாவட்டங்களில் சரத்குமாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் நேற்று வெளியிட்ட விளக்கக் கடிதம் ஒன்றில், ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என, தெரிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.சரத்குமாரின் விளக்கக் கடிதத்தை தொடர்ந்து, தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை, ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சரத்குமாருக்கு எதிராக, எந்த ஒரு கருத்தையும் ரசிகர்கள் வெளியிட வேண்டாம் அவரது உருவ பொம்மையை எரிக்கும் செயல்களில், ரசிகர்கள் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.