சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்!

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் பலர் கூறுகின்றனர். சரத்குமார் தற்போது நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு ரெண்டாவது ஆட்டம். இந்த படத்தின் வேலைகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் துவங்க இருக்கின்றது.

“என்னுடைய சிறு வயது முதல் நான் ஹோலிவுட் நடிகர் அல் பசினோவின் படங்களை பார்த்து தான் வளர்ந்து இருக்கின்றேன். அவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாக பதிந்து இருப்பது மட்டுமில்லாமல் ஒருவித தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தி இருக்கின்றது.

என்னுடைய கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு என்னுடைய முன்மாதிரி அல் பசினோவின் சாயல் இருப்பதை நான் கதை எழுதும் போதே உணர்ந்து கொண்டேன். மேலும் இந்த கதையை நான் என்னுடைய தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் பிச்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் மற்றும் நண்பர்களிடம் கூறும் போது, இந்த கதாபாத்திரத்திற்கு மிக சரியானவர் சரத் சார் தான் என்று அனைவருமே கூறினர். அவருடைய முகமும், உடலமைப்பும் இந்த கதாபாத்திரத்துக்கு கன கச்சிதமாக பொருந்தி உள்ளது.

இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கின்றார். சமீபமாக ரசிகர்கள் பெரும்பாலானோர் நடுத்தர வயது நிரம்பிய கதாநாயகர்களின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் எதிர்பார்ப்பை எங்களின் ரெண்டாவது ஆட்டம் முழுவதுமாக பூர்த்தி செய்யும்.

அதோடு சரத் சாரின் இந்த மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாய் அமையும். தற்போது எங்கள் படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குநர் பிரித்திவி ஆதித்யா.

Related Posts