யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின்
போராளிகளை, அரசாங்கம் சுட்டுக் கொன்ற விடயம் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு. விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டவர்களின் சரணடைவிற்கு, இலங்கை அரசுடன் இடைத்தரகராக பணியாற்றிய சந்திரநேரு, அது பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புலிகளின் உயிருக்கு உத்தரவாதம் தந்த விடயத்தையும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சந்திரகாந்தன் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயற்பட்டதும், பின்னர் மகிந்த அரசால் நாட்டைவிட்டு விரட்டப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இதுவரை, ஐ.நா உள்ளிட்ட பல தரப்பினருக்கும் இரகசியமாக கொடுத்து வந்த பல வாக்குமூலங்களை இப்பொழுது பகிரங்கமாக அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
சந்திரகாந்தனின் தகவல்ப்படி- முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சதான் ஆரம்பத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கியிருக்கிறார். மே 16, 17ம் திகதிகளில் இருதரப்பினரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். புலிகளின் சரணடையை அரசதரப்பு வரவேற்று, உயிருத்தரவாதம் வழங்கியுள்ளது.
இறுதியில் மகிந்த ராஜபக்சவும் சந்திரநேருவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். புலிகளின் சரணடைவை அவர் வரவேற்றுள்ளார்.
இந்த சமரச முயற்சிகளின் பலனாக, பசில் ராஜபக்ச மற்றும் நடேசன் ஆகியோர் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதனை இருவரும் தன்னிடம் உறுதி செய்ததாக சந்திரகாந்தன் கூறுகின்றார்.
எனினும், 18ம் திகதி அதிகாலையில் அனைத்து தொடர்புகளும் நின்றுவிட்டதாகவும், அந்த சமயத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (தற்போது சிறையில்) தான், அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயத்தை கூறியதாக தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்களிற்கு தேனீர் கொடுத்துவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக ஜோன்ஸ்டன் கூறியதாக சந்திரகாந்தன் கூறியுள்ளார்.