வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார்.
இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, இன்று வியாழக்கிழமை (14) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இறுதி யுத்தத்தின் போது 58ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர், விவரம் பதிவு செய்யப்பட்ட பட்டியலை சமர்ப்பிப்பதாக உறுதியளித்த சாணக்க குணவர்த்தன மன்றில் இன்று ஆஜராகினார்.
ஆனால், அவர் அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, இராணுவத்தினரால் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களின் விவரங்களையும், தற்போது புனர்வாழ்வு பெற்று வருபவர்களின் விவரங்களையும் சமர்ப்பித்தார்.
இதனால் கோபமடைந்த நீதவான், ‘நீங்கள் கொண்டு வந்துள்ள விவரங்களை புனர்வாழ்வு அமைச்சினூடாகப் சாதாரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் விவரங்களையே நீதிமன்றம் கோரியது’ என்றார்.
அந்த விவரங்களை அடுத்த தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், எனக்கூறிய நீதவான், வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.