பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்று 10.45 மணியளவில் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்னால் ஆரம்பமாகிய போராட்டம் 30 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து வவுனியா நகரசபை மைதானத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது அங்கு கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி வாய்க்கு கறுப்புத் துணி கட்டி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் போடாதே போடாதே பொய்வழக்குப் போடாதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், எமது வாழ்வு எமது கையில் அந்நியர்க்கிங்கு இடமில்லை, விடுதலை விடுதலை எங்கள் தாயை விடுதலை செய், சரணடைந்தவர்கள் என்ன பலி ஆடுகளா காணாமல் போகச் செய்வதற்கு போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீதிமன்றம் மற்றும் நகரசபை மைதானம் ஆகிய இடங்களில் பொலிஸாரது பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நீதிமன்றத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அமைதியான முறையில் செய்கின்றோம் என்று தெரிவித்ததையடுத்து நகரசபை மைதானத்தில் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோநேகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் , வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உறுப்பினர்களான சிவமோகன், ரவிகரன் ஆகியோருடன் மன்னார் , முல்லைத்தீவு பிரஜைகள் குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பபினர்கள் மற்றும் மக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.