சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பொலிஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்தக் காரில் பயணித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இலங்கைத் தமிழ் அகதிகளாவர். ஏனையோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளாலேயே சயனைட் குப்பிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரிஐ குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஸ்ணகுமார் (39), சசிகுமார் (26), ராஜேந்திரன் (44) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Posts