சம்மந்தன், மாவை, சுமந்திரனின் சம்மதத்துடனேயே வெளிநாட்டு அகதிகளை வடக்கிற்கு அழைத்து வந்தோம்!!

இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வடக்கில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசு கட்சியின் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் சம்மதம் வெளியிட்டிருந்தனர். எனினும், பிரதேச அளவில் இருக்கின்ற அரசியல்வாதிகளே அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன்.

யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வடக்கில் தங்க வைப்பது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்த அகதிகள் 21 ஆம் திகதி நடந்த பாரிய குண்டுத் தாக்குதலின் பின்னர், அந்த வீட்டின் உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையம் சென்றிருந்தனர். ஆனால் அங்கு அனைவரையும் தங்க வைக்க முடியாது. அதனால் அவர்களை வடக்கில் குடியேற்றுவது தொடர்பில் ஐ.நா சபையினர் என்னுடன் பேசியிருந்தனர்.
அதற்கமைய வடக்கிற்கு கொண்டு வரலாம் என்று நான் கூறியிருந்தேன். வடக்கில் தங்க வைக்க முகாம்கள் உண்டு என்று கூறியிருந்தேன்.

ஏனெனில் இங்கு இராணுவ முகாம்கள் பல இருக்கிறது. அதற்கு என்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தேன். அவ்வாறு நான் கூறிய நேரத்தில் சில தமிழ் அரசியல் தரப்புக்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தன.

ஆனாலும் சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா கூட இது மனிதாபிமான பிரச்சனை. நாங்கள் கூட அகதிகளாக இருந்திருக்கிறோம் எங்கள் மக்கள் கூட எத்தனையோ நாடுகளில் அகதிகளாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் அகதிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பிரதேச அளவில் இருக்கிற சின்ன அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக எதிர்த்தனர். எதிர்ப்பு நடவடிக்கைகள் இருக்கின்றபடியால் வடக்கிற்கு அவர்களைக் கொண்டு வருகின்றதை நான் தாமதித்தேன். ஏனென்றால் இங்கு இன்னும் பிரச்சனைகள் ஏற்படுத்த எனக்கு விருப்பமில்லை. அப்படியிருந்த போதும் இப்போதைக்கு 36 பேரை வவுனியா பூந்தோட்டத்தில் தங்க வைத்திருக்கின்றனர்.

இது ஐநா விற்கும் வெளிவிவகார அமைச்சிற்கும் இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் நடந்த விசயம். இதில் துக்ககரமான செய்தி என்னவென்றால், இதைப்பற்றி எனக்கு இன்னமும் சொல்லவில்லை. அதேபோன்று வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதனுக்கும் சொல்லவில்லை. வவுனியாவினுடைய அரச அதிபர் உட்பட, எங்கள் யாருக்கும் சொல்லவில்லை.

ஆகையினால் இந்த அகதிகள் தொடர்பில் செய்கின்ற விடயங்களை தயவு செய்து எங்களுக்கும் தெரியப்படுத்தி முழுமையாக விபரங்களை எங்களுக்கும் தாருங்கள் என்று நேற்று நான் கடிதம் மூலம் கேட்டிருக்கின்றேன். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது சில தினங்களிற்கு முன்னர் ஒரு திருச்சபையைச் சேர்ந்த ஒருவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆறுபேரை- அதாவது ஒரு குடும்பத்தை- அந்தத் திருச்சபைக்குச் சொந்தமான ஒரு தனியார் வீட்டில் யாழ்ப்பாணத்தில் தங்க வைத்திருந்தனர். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கு என்ன காரணம் என்றால், நாட்டில் இருக்கிற பாதுகாப்பு நிலைமையின் படி தனி வீடுகளில் இருக்க முடியாது என்றுதான் அங்கிருந்த வெளியேறிய இந்த மக்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு வந்த சேர்ந்தனர். ஆகையினால் அவர்களை திரும்பவும் யாழிலோ அல்லது வேறு இடத்திலோ தனியார் வீடுகளில் தங்க வைப்பது பாதுகாப்பை நாங்கள் இன்னும் குறைப்பதாகவே இருக்கும்.

அதனால் அந்த வீட்டிலேயோ, வேறு இடங்களிலோ தாக்கம் ஏற்படக் கூடும். அந்த மக்கள் எங்கு போவது என்று தெரியாத நிலை ஏற்படும். ஆக அரசாங்கமே பாதுகாப்பு கொடுக்கின்ற இந்த நேரத்தில் தனியார் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையினால் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

அதில் அவர்கள் விருப்பமென்றால் பூந்தோட்டம் முகாமில் சென்று இருக்கலாம். மத ரீதியாகவோ அல்லது மனிதாபிமான ரீதியாகவோ உதவி செய்வதற்கு நான் உதவி செய்கிறேன். ஆனால் வீட்டில் தங்க வைக்க முடியாது என்று தீர்மானமாக சொன்னேன்.

வடமாகாணத்தில் இருக்கின்ற பாதுகாப்பு நிலைமைகளுக்கமைய பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர் எனக்கு தரும் அறிக்கையினூடாக நான் சில தீர்மானம் எடுக்க வேண்டும். அது என்னுடைய பொறுப்பு. ஆகையினால் நான் அவர்கள் வெளிக்கிட வேண்டுமென்று சொன்னதன் அடிப்படையில் அவர்கள் இங்கிருந்து வெளிக்கிட்டுள்ளனர்.

இதேவேளை இங்கு வந்த ஆப்கானிஸ்தான் குடும்ப தகப்பனுக்கு நான் தொலைபேசியிலும் இந்த விடயங்களைச் சொன்னனேன். அதாவது ஆளுநர் என்ற ரீதியில் பெரும் கஸ்ரமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன். அவரும் அவரது நாட்டில் ஆளுநராக இருந்தவராம். ஆக அரசியல் விடயங்கள் பற்றி உங்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேபோல அந்த பிள்ளைகளுக்கும் இந்த விடயங்களைச் சொன்னேன். அதாவது நான் எடுக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பில் என்னுடன் கோபிக்காதீர்கள், நான் எனது கடமைகளையே செய்கின்றேன் என்று. ஏனெனில் நானும் ஒரு தகப்பன். எனக்கும் உங்கள் நிலைமைகள் விளங்குகிறது. இந்த நிலைமை சீக்கிரமாக மாற வேண்டுமென்றுதான் நான் பிரார்த்திக்கிறேன். அவ்வாறு மாறின உடன் வடக்கு மாகாணத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் தங்குவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளேன்.

இதேவேளை நான் இவ்வாறு செயற்பட்டதை சிலர் வேறுவிதமாக சொல்லி பிரச்சாரம் செய்து திட்டி தீர்க்கின்றனர். ஆனால் நிலைமைகளை அறிந்து செயற்பட வேண்டியது அவசியம். அதற்கமையவே நான் செயற்பட்டிருக்கின்றேன். ஆகையினால் இவை தொடர்பில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளும் பிரச்சாரம் அல்லது அதனைச் செய்கின்றவர்கள் தொடர்பில் நான் பதில் கூறாமல் இருப்பதே சிறந்தது என்றார்.

ஆனாலும் அறிவழகன் என்று பெயர் இருக்கின்ற எல்லாருமே அறிவுள்ள ஆட்கள் இல்லையே. பல்கலைக்கழகம் செல்வதும் பட்டம் பெறுவதும் அதனை மக்களுக்கு பயன்படுத்துவதற்குத் தான். அதனைவிடுத்து வெறுமனே கலாநிதி அல்லது பேராசிரியர் என்றோ பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதற்கல்ல அதனை மட்டும் தான் நான் சொல்லிக் கொள்வேன். அங்கு அன்று என்ன நடந்தது என்பது அங்கிருந்த அருட்தந்தைக்கு தெரியும் என்றார்.

வெளிநாட்டு அகதிகளை பாதுகாப்பாக- சர்ச்சையின்றி தங்க வைக்க ஆளுனர் முயற்சிகள் மேற்கொண்டபோது, பேராசிரியர் ரட்ணஜீவன் கூழ் அவசரக்குடுக்கை தனமாக, தென்னிந்திய திருச்சபையின் ஊடாக, ஒரு குடும்பத்தை யாழிற்கு அழைத்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts