8 நாடுகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
‘மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணம் 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
1998ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற முதல் தொடரில் தென்னாபிரிக்க அணிமேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இதுவரை 7 சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்கள் நடைபெற்றுள்ளன. முதல் 2 தொடர்களும் ஐ.சி.சி. ‘நொக் அவுட்’ கிண்ணம் என்று அழைக்கப்பட்டன. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா இரண்டு முறை கிண்ணத்தை வென்றுள்ளன.
இந்திய அணி 2002 ஆம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து கூட்டாக வென்றது. தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை தலா ஒரு முறை வென்றன. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பின்னர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அதை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்தை டோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
8ஆவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தத் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள நாடுகள் பங்கேற்கின்றன. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்கின் படி தரவரிசையில் உள்ள ‘டொப் 8’ நாடுகள் தகுதி பெற்றன.
மேற்கிந்தியத் தீவுகள்
9ஆவது இடத்தில் இருந்ததால் வாய்ப்பை இழந்தது. பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத் தீவுகளைப் பின்னுக்கு தள்ளி வாய்ப்பை பெற்றது. 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு பங்களாதேஷ் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கு திரும்பியுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடும் 8 அணிகளும் இரண்டு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து (போட்டியை நடத்தும் நாடு), நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகளும், ‘பி’பிரிவில் இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
12ஆம் திகதியுடன் ‘லீக்’ ஆட்டம் முடிவடைகிறது. 13ஆம் திகதி ஓய்வு நாளாகும். 14ஆம் திகதி முதல் அரையிறுதியும், 15ஆம் திகதி இரண்டாவது அரையிறுதியும் நடைபெறும். இறுதிப்போட்டி 18ஆம் திகதி நடக்கிறது.
இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்தப்போட்டியில் விளையாடும் அணிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 அணிகள் தான் கிண்ணத்தை வெல்லவில்லை. இங்கிலாந்து 2 முறை இறுதிப் போட்டியில் தோற்று இருக்கிறது. இதனால் அந்த அணி முதல் முறையாக கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
ஏற்கனவே வென்ற அணி கிண்ணத்தை வெல்லுமா? அல்லது புதிய அணி பட்டம் பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சம்பியன்ஸ் கிண்ணக் கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் சரி, இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம்.
1996ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நடந்த ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அதில் ஒரு முறை சம்பியனும் கூட. ஆறு இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை சம்பியனாகியிருக்கிறது.
1998இல் நடந்த முதல் மினி உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி.
2002 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. இறுதிப் போட்டியின் போது மழை பெய்ததால் போட்டி அடுத்த நாள் மீண்டும் ஆடப்பட்டது. அந்த நாளிலும் மீண்டும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர் நடுவர்கள். இதனைத் தொடர்ந்து கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் கிண்ணத்தை வென்றது இலங்கை.
2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்துஇ தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது.