Ad Widget

சம்பள முரண்பாட்டினை நீக்கக்கோரி பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஒரு நாள் போராட்டம் ஒன்றில் நாளைய தினம் ஈடுபடவுள்ளனர்.தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.இந்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமது சுற்று நிருபத்திற்கமைய சம்பள முரண்பாட்டை தீர்க்க தவறிவிட்டது.இது தொடர்பாக கல்வி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுக்கள் பலனளிக்கவில்லை. இதையடுத்தே அவர்கள் நாளை ஒருநாள் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தர்களில் இரு தரப்பினருக்கு மட்டும் நன்மையளிக்கும் வகையில் சம்பள அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பள நிர்ணய ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, திறைசேரி, உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீது தொழிற்சங்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பள முரண்பாட்டை உடனடியாகத் தீர்க்கவேண்டும். சம்பள முரண்பாட்டைச் சீர்செய்யும் வரை சகல வகையான கல்விசாரா ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தின் 25 வீதத்தினை ஒரு கொடுப்பனவாக வழங்குமாறும் தொழிற் சங்கக் கூட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

நாளைய தினம் இந்த பகிஷ்கரிப்பு நடைபெறும் அதேவேளை இதற்கான பதில் எதுவும் அரசிடமிருந்து கிடைக்காதவிடத்து தொடர்ந்தும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாகவும் சங்கம் அறிவித்துள்ளது.இந்த போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் மட்டும் தமது கடமையில் ஈடுபடுவர் எனவும் மாணவர் விடுதிகளுக்கான நீர்வழங்கல் சேவை தடைப்படாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts