சம்பந்தர், ஹேரத் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜர்

இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர்.

அக்குழுவில் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் வியாழக்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராவதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க வருமாறு அறிவிப்பு மட்டுமே மேல்முறையீட்டு நீதிமன்றம்வெளியிட்டது என்றும் அது அழைப்பாணை அல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

மோதல் வலுக்கிறது?
இதே போல அக்குழுவில் எதிர்கட்சிகள் சார்பில் அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜத ஹேரத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகி தமது கருத்தை அளிக்கவுள்ளதை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பிபிசி சந்தேஷ்யவிடம் உறுதிப்படுத்தினார்.

தலைமை நீதிபதி நீதிமன்றத்தை எதிர்நோக்காமால் அவரை பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என்றும், நீதிமன்றத்தை புறக்கணிக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக தமது கட்சி இருக்க விரும்பவில்லை என்றும் அனுரகுமார திஸநாயக்க கூறுகிறார். இலங்கையில் நாடாளுமன்ற செயல்பாடுகளே கேலிக்கூத்தாக இருக்கும் போது, நாடாளுமன்றம்தான் அனைத்திலும் உயர்ந்தது என்று அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.நாடாளுமன்ற வழிமுறைகள் இலங்கையில் மதிக்கப்படுவது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்குழுவில் உறுப்பினராக இருந்த ஜான் அமரதுங்க மற்றும் லக்ஷமண் கிரியெல்ல நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் செல்லமாட்டார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைப்பதற்கோ அல்லது தலைமை நீதிபதியை பதவி நீக்கும் முயற்சிகளுக்கோ உடன்படவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.சொந்த நலன்களுக்காகவே அரசு ஒரு அரசியல் வழிமுறையை கையாண்டது என்றும் தமது உறுப்பினர்கள் அந்தத் தேர்வுக் குழுவிலிருந்து விலகியும் விட்டார்கள் என்றும் ஐ தே க வின் பொதுச் செயலர் கூறியுள்ளார்.

-நன்றி பிபிசி

Related Posts