சம்பந்தரும் விக்கியும் தமிழினத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும் : சிவாஜிலிங்கம்

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வட. மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் பொன். சிவகுமாரனின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று காலை யாழ். உரும்பிராயிலுள்ள அவரது நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் “எங்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை. எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும்.

தமிழ் மக்களுடைய விடுதலைக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி சிவகுமாரன், ஆயிரக்கணக்கான மாவீரர்கள், இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆகியோருக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி என்பது அவர்கள் விட்டுச் சென்ற விடுதலை உணர்வுகளை, கனவுகளை வென்றெடுப்பதேயாகும்” என்றார்.

Related Posts