தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரினவாதி என வர்ணிக்கும் இவர்கள் ரணிலை என்னவென்று சொல்லப்போகின்றார்கள் என்றும் அவர் வினவியுள்ளார்.
பொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி மேற்கண்டவாறு கூறினார்.
பொத்துவில் குண்டுமடு பிரதேச வரலாற்றில் தேர்தல் காலங்களில் அவ்வப்போது காளான்களாக முளைக்கும் அரசியல்வாதிகள் வாய்ப்பேச்சில் வீரர்களாக வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்றபின் மறைந்து விடுகின்றனர். இந்த நிலையில் பிரதேச சபையோ, பிரதேச செயலகமோ தங்களது பிரதேசத்தை அபிவிருத்தி விடயத்தில் புறந்தள்ளி பார்க்கின்றனர். இதற்கு பொறுப்பு கூறுவது யார் போன்ற கேள்விகள் இங்கு வாழும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து உரையாற்றிய இனியபாரதி, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே கூட்டமைப்பின் கொள்கை. அதனால் மாத்திரதே தமிழர்களது வாக்கை பெற்று தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இவர்களது நம்பிக்கையாகும்.
இவர்களது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க புத்திஜீவிகளும் பொதுமக்களும் சற்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது. அவ்வாறு முன்கூட்டி சிந்தித்திருந்தால் இவ்வாறான கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றார்.
தன்மானமும் தனித்துவமும் உள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு இன்று ரணிலுடன் கூட்டிணையும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்படியானால் அவர்களின் தன்மானமும் தனித்துவமும் எங்கே போனது. ஆகவே தங்களது இருப்பிற்காக தமிழர்களை பலிக்கிடவாக மாற்றும் இவர்களது அரசியல் கொள்கைக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.