தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது.
வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின் போது, தமிழ் தேசிய கீதம் பாடப்பட்டமையானது இது இரண்டாவது தடவையாகும். சுதந்திர சதுக்கத்தில் 1949ஆம் ஆண்டு, நடைபெற்ற தேசிய வைபவத்தின் போது முதன்முறையாக பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, படை அதிகாரிகளும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர்.
இதேவேளை, இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில், தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அரசியல் வாதியொருவர் ஹட்டன்- கினிகத்தேனை நகரில் நேற்று, வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மீதேறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
‘நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தைமீறி தமிழில் தேசிய கீதம் பாடியுள்ளனர்’ அதனை அனுமதிக்கமுடியாது என்றும் அவர் கோஷமெழுப்பினார்.