சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அவசர கடிதம்

“நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதன் பிரதியை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கும் அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார்.

எனினும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளில் 60 தொடக்கம் 70 பேர் வரையிலேயே பிணையில் விடுவிக்கப்படக் கூடிய சாத்தியம் உள்ளது என்று சட்டமா அதிபர் திணைக்களத்தினர், அரசியல் கைதிகளின் சட்டத்தரணிகளிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் மேற்படி கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சரியான நிலைப்பட்டை முன்வைக்க வேண்டும்.

பொது மன்னிப்பு இல்லாவிடில் நிரந்தர தீர்வாக பொது விடுதலையை வலியுறுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு வேறு நிலைப்பாடு குறித்து தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளாகிய நாம் மனவருத்தம் அடைகின்றோம்.

பொது மன்னிப்புத்தான் சரியான தீர்வு எனச் சிலரும், பொது மன்னிப்பை வழங்க முடியாது அது போர்க்குற்றச்சாட்டு உள்ளவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என வேறு சிலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ்வாறான இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுவதால் அவை எந்த வகையில் கைதிகள் விடயத்தில் தாக்கத்தை செலுத்தி நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்? இதனால் எமக்கும், எமது பிள்ளைகளான – உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மனத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நாமும், எமது பிள்ளைகளும் ஏமாற்றப்பட்டதாலேயே கடந்த 12 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாம் கடந்த காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத இழப்புக்கைளை சந்தித்தவர்கள். எஞ்சியிருப்பது சிறையில் உள்ள எமது உறவுகள்தான். புதிய ஆட்சியிலாவது தமிழர்களின் அடிப்படைத் தேவையாவது நிறைவேறும் என நம்பியிருந்தோம்,

ஆனால், கைதிகளின் விடயத்தில் கூட முன்னேற்றம் இல்லை. 8 – 18 வருடங்கள் சிறையில் வாழ்க்கையைக் கழித்த எமது உறவுகளுக்கு தற்போது பிணை வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையிலும், அனைவருக்கும் பிணை வழங்க முடியாது என்று கூறியிருக்கும் அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் நிரந்தரத் தீர்வு என்ன என்பதை நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும் – என்றுள்ளது.

Related Posts