சம்பந்தனின் அறிவிப்பை வரவேற்கிறது தமிழ் மக்கள் பேரவை!

தமிழ் மக்கள் பேரவை தயாரிக்கும் தீர்வுத் திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டால், அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தை அடுத்து ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய கூட்டமைப்பின் தலைவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் இந்த கருத்தை நாம் வரவேற்பதுடன், பேரவையின் உப குழுவினால் தயாரிக்கப்படும் தீர்வுத் திட்ட வரைபானது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமும் கையளிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் கையளிப்பது என்ற தீர்மானம் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போதே எடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்குட்பட்ட விதத்தில் பேரவையால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்வுத்திட்ட வரைபு தமிழ் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, இறுதி வடிவம் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts