சமூகவலைதளத்தில் இந்தி- மத்திய அரசுக்கு கருணாநிதி கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று சமீபத்தில் ஆணை பிறப்பித்துள்ளதாக வந்த செய்தியை கண்டித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Karunanidhi

அந்த அறிக்கையில், அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன் முறையாக முடிவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும்.’ என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவதுகால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும். எனவே பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்’ என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

ஹிந்தி திணிக்கப்படுவதை மட்டுமே திமுக எதிர்க்கிறதே தவிர ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை என்று கூறும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அ ராமசாமி, திமுக நிறுவனர் அண்ணாவே ஹிந்தி கற்றார் என்றும் கூறுகிறார்.

அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை மோடி தலைமையிலான ஊக்குவிப்பதில் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் தமிழிசை சவுந்திரராஜன்.

Related Posts